உங்கள் ஊருக்கு கொரோனா வராதா... அச்சத்தில் தள்ளி நிற்கச் சொன்னவர் குத்திக்கொலை.

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்ட செல்கிறது. இதனால் இன்று மாலை முதல் 144 தடை உத்தரவை தமிழக முதல்வர் நேற்று அறிவித்தார். இதான் அத்தியாவசிய பொருட்கள் கிடைகாது என்ற அச்சம் காரணமாக பொதுமக்கள் காலை முதலே நகராட்சி சந்தைகளில் குவியத் தொடங்கினர்.

நகராட்சி சந்தை காலை 6 மணிக்கு திறக்கபட்டு லாரிகள் மூலம் காய்கறிகள் இறக்கும் தொழிலில் பாரம் தூக்கும் தொழிலாளர்கள் பலர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் உதகையை அடுத்துள்ள நொண்டிமேடு பகுதியை சார்ந்தவர் ஜோதிமணி. இவர் உதகை நகராட்சி சந்தையில் பாரம் தூக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இவர் பாரம் தூக்கும் சங்கத்தின் செயலாளராகவும் உள்ளார். இவர் இன்று கூட்டம் அதிகம் காரணமாக காலை முதல் மதியம் வரை நகராட்சி சந்தையிலேயே இருந்து விட்டு மதிய உணவு உட்கொள்ள அருகில் இருந்த உணவகத்திற்கு நண்பர்களுடன் சென்றுள்ளார்.


அப்போது அதே கடைக்கு தேவராஜ் என்பவரும் வந்துள்ளார். கேரளாவை சார்ந்த இவர் அருகே உள்ள பேக்கிரியில் வேலை செய்து வந்துள்ளார். உணவு சாப்பிடும் போது தேவராஜ் நேற்று தான் கேரளாவில் இருந்து வந்ததாக மெஸ் உரிமையாளரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அப்போது ஜோதிமணி எதார்தமாக கேரளாவில் கொரோன தொற்று அச்சம் நிலவுவதால், தேவராஜ்-ஐ சற்று தள்ளி நிற்க கூறியுள்ளார். இதனால் ஜோதிமணிக்கும் தேவராஜிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் கைகலப்பில் முடிந்துள்ளது.

ஜோதிமணி தேவராஜ்சை தாக்கியுள்ளார். ஆத்திரம் அடைந்த தேவராஜ் வெங்காயம் வெட்ட வைத்திருந்த கத்தியை எடுத்து உங்கள் ஊரில் நோய் பரவாதா? எனக் கூறி ஜோதிமணியை கழுத்து பகுதியில் குத்தியுள்ளார். கத்திக் குத்தில் நிலைகுலைந்த ஜோதிமணி பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிழே விழுத்துள்ளார்.

உடனடியாக ஜோதிமணியை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் போது அவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் நடந்த பகுதியில் இருந்த தேவராஜ்-ஐ உதகை நகர காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறன்றனர்.