உலகம் முழுவதும் கொரோனாவால் 36,206 பேர் உயிரிழப்பு.

சீனாவில் கொரோனா-வால் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இத்தாலியில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 1 லட்சத்து ஆயிரத்து 739 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 812 பேர் அங்கு உயிரிழந்ததைத் தொடர்ந்து, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 591 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் சீனாவை ஸ்பெயின் முந்தியுள்ளது. அங்கு 85 ஆயிரத்து 195 பேர் இதுவரை கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். 24 மணிநேரத்தில் 537 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை ஏழாயிரத்து 340-ஆக உயர்ந்துள்ளது.


ஈரானிலும் 117 பேர் ஒரே நாளில் உயிரிழந்ததை தொடர்ந்து, மொத்தம் இரண்டாயிரத்து 757 பேர் அங்கு உயிரிழந்திருக்கின்றனர். இதனால் உலகம் முழுவதும் 36 ஆயிரத்து 206 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதில், 26 ஆயிரம் பேர் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

அமெரிக்காவில், ஒரு லட்சத்து 45443 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டாயிரத்து 613 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக ஏழரை லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யஹுவின் உதவியாளருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து, அவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.