இந்தியாவில் வேகமாகப் பரவிவரும் கொரோனாவைரஸைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தவருகின்றனர். 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து, வெளி மாநிலங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் அவர்களது சொந்தமாநிலங்களுக்கு நடந்தே சென்றனர். இது தேசிய அளவில் பெரும் பிரச்னையாக மாறியது.
இதற்கிடையில், பிரதமர் மோடி 21 நாள் ஊரடங்கை நீட்டித்துள்ளார் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. இந்தநிலையில், இதுகுறித்து மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. இதுகுறித்த செய்தித் தகவல் தொடர்புத்துறை ட்விட்டர் பதிவில், ‘21 நாள் ஊரடங்கு உத்தரவு முடிந்த பிறகு அதனை மீண்டும் அரசு அதிகரிக்கும் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அதுபோல வதந்திகளும் பரவுகின்றன. இந்தத் தகவல்கள் அடிப்படை ஆதராமற்றது என்று அமைச்சரவைச் செயலாளர் தெரிவித்துள்ளார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.